Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியீடு

உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானி்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து என பத்து அணிகள் பங்கேற்கின்றன.

ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக் கோப்பை 2023 தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் எப்போது நடைபெறும் என்ற விவரங்களை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதன்படி, செப்டம்பர் 29-ந்தேதி மட்டும் மூன்று பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதே நாளில், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

செப்டம்பர் 30-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 2-ந்தேதி இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம், நயூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன. அக்டோபர் 3-ந்தேதி நடைபெறும் மூன்று ஆட்டங்களில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை, இந்தியா மற்றும் நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.

உலகக் கோப்பை 2023 தொடருக்கான டிக்கெட்களை இந்திய ரசிகர்கள் புக்மைஷோ தளத்தில் வாங்கிட முடியும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது. உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பத்து பயிற்சி ஆட்டங்களும் அடங்கும். டிக்கெட் விற்பனை நாளை (ஆகஸ்ட் 24) துவங்கி, செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடரின் ஒவ்வொரு கட்டம் மற்றும் போட்டிகளுக்கான டிக்கெட்கள் பலக்கட்டங்களாக விற்பனை செய்யப்பட உள்ளன.