2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.
‘ஏ’ பிரிவில் இந்தியாவுடன் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. தனது முதல் லீக்கில் குவைத்தை தோற்கடித்த இந்தியா நேற்று கத்தார் அணியை புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சந்தித்தது.
தரவரிசையில் இந்தியா 102-வது இடத்திலும், கத்தார் 61-வது இடத்திலும் உள்ளன.
இதில் தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆசிய சாம்பியனான கத்தார் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது. கத்தார் அணியினர் மேலும் சில வாய்ப்புகளை நழுவ விட்டனர். இல்லாவிட்டால் கோல் எண்ணிக்கை இதை விட உயர்ந்து இருக்கும். கத்தார் தரப்பில் முஸ்தபா தாரேக் மாஷல் (4-வது நிமிடம்), அல்மியோஸ் அலி (47-வது நிடம்), யூசுப் அதுரிசக் (86-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுடன் மார்ச் 21-ந்தேதி மோதுகிறது.