இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா உள்பட 10 நாடுகள் பங்கேற்று விளையாடிவருகின்றன. இதில் டூ பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால், அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க அந்த அணி போராடி வருகிறது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து ஒய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அணியின் தேர்வுக்குழு அவரது கோரிக்கையை நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘இஎஸ்பிஎன்’ செய்தி நிறுவனம் , தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோதும் இந்த ஆண்டு நடைபெற்றுவரும் உலகக்கோப்பையில் பங்குபெற விருப்பம் தெரிவித்ததாகவும், உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியின் தேர்விற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக தனது விருப்பத்தை தேர்வுக்குழுவிடம் டிவில்லியர்ஸ் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
டிவில்லியர்ஸின் விருப்பத்திற்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஆனால் தேர்வுக்குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை அணியில் தேர்வு செய்யவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டி வில்லியர்ஸை அணியில் சேர்க்காதது ஏன் என்பது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் லிண்டா சோண்டி கூறியதாவது:-
2018-ல் டி வில்லியர்ஸை ஓய்வு பெற வேண்டாம் என மன்றாடினேன். அவர் நினைத்தபோது தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தவறானவை என்றாலும், அவர் விருப்பப்படி ஆட்டங்களைத் தேர்வு செய்து ஆடி உலகக் கோப்பைப் போட்டியில் நல்ல உடற்தகுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் விளையாடும் அனுமதியை அளித்தேன்.
உள்ளூரில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவர் கலந்துகொண்டு உலகக் கோப்பைப் போட்டித் தேர்வுக்கான தகுதியை அடையவேண்டும் என்றும் கூறினேன். ஆனால் அவர் பாகிஸ்தான், வங்கதேச 20 ஓவர் லீக் போட்டிகளில் கலந்துகொண்டார். என்னுடைய கோரிக்கைகளை மறுத்து நிம்மதியாக ஓய்வு பெறுவதாகக் கூறினார்.
நாங்கள் உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவிக்க இருந்த நாளன்று கேப்டன் டூ பிளஸிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ஆகியோர் என்னிடம், டி வில்லியர்ஸ் உலகக்கோப்பைப் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.
இது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. அவர் ஓய்வு பெற்றதால் வெற்றிடம் உருவானது. அதை நிரப்ப எங்களுக்கு ஒரு வருடமானது. அந்தக் காலக்கட்டத்தில் கடினமாக உழைத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டியிருந்தது. எனவே கொள்கையளவில் டி வில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்தோம். அணிக்கும் தேர்வுக்குழுவுக்கும் கிரிக்கெட் அமைப்புக்கும் வீரர்களுக்கும் நாங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக, அணியில் தேர்வு செய்ய தன்னை அவர் தயாராக வைத்திருக்கவில்லை. அவருடைய கோரிக்கை எங்களுக்குக் கிடைத்தபோது உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஏபி டி வில்லியர்ஸ், உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயம் நாங்கள் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்கவேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.