உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் – நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வி
10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார்.
ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர்.
இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் டோனிக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.