Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும் நேர்த்தியாக ஆடி அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் (13.1 ஓவர்) திரட்டினர். கருணாரத்னே 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து திரிமன்னே வந்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் (21.2 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ரன்களை சுலபமாக தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் திரிமன்னே (25 ரன்) கிளன் போல்டு ஆனார். குசல் மென்டிஸ் (2 ரன்), மேத்யூஸ் (0) ஆகியோரும் அதே ஓவரில் வீழ்ந்தனர். அடுத்த ஓவரில் தனஞ்ஜெயா டி சில்வாவும் (0) வெளியேற்றப்பட்டார்.

வெறும் 5 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் இலங்கை அணி தடம்புரண்டது. ஒரு பக்கம் குசல் பெரேரா அரைசதம் அடித்து போராடிய போதிலும் மற்ற வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். குசல் பெரேரா 78 ரன்களில் (81 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பலத்த மழை பெய்ததால் ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித்கான், தவ்லத் ஜட்ரன் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

பின்னர் மழை பாதிப்பு உள்ளிட்ட சூழலை கணக்கிட்டு ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி ஆப்கானிஸ்தான் 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்குள் முகமது ஷாசத் (7 ரன்), ரமத் ஷா (2 ரன்), ஹஸ்மத்துல்லா ஷகிடி (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.

இதன் பிறகு இலங்கை பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மீள முடியவில்லை. 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருது பெற்றார். தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று இருந்த இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *