X

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இன்று பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டி விட்டது. பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

2 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ள பாகிஸ்தான் அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டியது தான். முந்தைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தானுக்கு புதுதெம்பு அளித்துள்ளது. குறிப்பாக அந்த ஆட்டத்தில் ஹாரிஸ் சோகைல், பாபர் அசாம் ஆகியோரின் அரைசதங்களும், இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடி அளித்த சிறப்பான தொடக்கமும் பாகிஸ்தானின் நம்பிக்கைக்கு தீனிபோட்டுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிரும் (இந்த உலக கோப்பையில் 4 மெய்டனுடன் மொத்தம் 15 விக்கெட்), வஹாப் ரியாசும் (8 விக்கெட்) பவுலிங்கில் மிரட்டுகிறார்கள். ஆனால் பீல்டிங் தான் மெச்சும்படி இல்லை. ‘கடந்த ஆட்டத்தில் நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறினார்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் தோல்வியின்றி பயணத்தை கம்பீரமாக தொடருகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும்.

நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்-அவுட் ஆன போதிலும் வில்லியம்சனும், டெய்லரும் இணைந்து 300 ரன்களை நெருங்க வைத்தனர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (8 விக்கெட்), லோக்கி பெர்குசன் (14 விக்கெட்), ஜேம்ஸ் நீஷம் (7 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள். இதில் பவுல்ட், பெர்குசன் இருவரும் சராசரியாக ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டியிருக்கிறார்கள். எல்லா வகையிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும் நியூசிலாந்துக்கு இப்போது இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது.

அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிப்பதில் தடுமாறுகிறது. மேலும் ஒரு ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கினால் கேப்டன் என்ற முறையில் வில்லியம்சன் தடையை சந்திக்க நேரிடும்.

இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 14 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் ஈடுகொடுக்குமா? அல்லது பணிந்து போகுமா? என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹாரிஸ் சோகைல், இமாத் வாசிம், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), வஹாப் ரியாஸ், ஷதப் கான், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் கிரான்ட்ஹோம், சான்ட்னெர், மேட் ஹென்றி, பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags: sports news