உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்தும், நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்தும் விளையாடின.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்பீல் கேட்ட விவகாரத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு விவகாரத்தில் கடந்த 24 மாதங்களுக்குள் விராட் கோலி சிக்கியுள்ளார். இதனால் சஸ்பெண்ட் செய்வதற்கான இரண்டு தகுதி இழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். வரும் போட்டிகளிலும் இதுபோன்ற செயல்களால் ஒருவேளை நான்கு அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்றுவிட்டால் அது சஸ்பெண்ட் நடவடிக்கையாக மாறிவிடும்.
நான்கு புள்ளிகளுக்கு மேல் பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 இதில் எது முன்னதாக வருகிறதோ? அதில் விளையாட தடைவிதிக்கப்பட்டும். அந்த வகையில் இந்தியா இன்னும் நான்கு லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டியுள்ளது. ஒருவேளை மோசமான சம்பவத்தால் விராட் கோலி நான்கு புள்ளிகள் பெற்றுவிட்டால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடுவது கஷ்டமாகிவிடும்
அதேபோல் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்கள் வீசி முடிக்கவில்லை என 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்னொரு போட்டியில் அபராதம் விதிக்கப்பட்டால் கேன் வில்லியம்சனும் தடைக்கு உள்ளாவார்.
இப்படி நடந்தால் இரண்டு அணிகளும் பேராபத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை விராட் கோலி தடைபெற்றால், அதை இந்திய அணியால் ஜீரணிக்க முடியாது. அதேபோல் கேன் வில்லியம்சன் தடைபெற்றால், நியூசிலாந்தால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.