உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது வெற்றியை ருசித்தது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நேற்று நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து சொதப்பிய சோயிப் மாலிக், ஹசன் அலி கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல், ஷகீன் அப்ரிடி சேர்க்கப்பட்டனர்.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு பஹார் ஜமானும், இமாம் உல்-ஹக்கும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இமாம் உல்-ஹக், நிகிடியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்தினார். அணியின் ஸ்கோர் 81 ரன்களாக (14.5 ஓவர்) உயர்ந்த போது, பஹார் ஜமான் (44 ரன், 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) இம்ரான் தாஹிரின் சுழற்பந்து வீச்சில் பந்தை தலைக்கு மேல்வாக்கில் தூக்கி விட முயன்ற போது கேட்ச் ஆனார். அவரது மற்றொரு ஓவரில் இமாம் உல்-ஹக்கும் (44 ரன், 6 பவுண்டரி) சிக்கினார்.
அடுத்து வந்த வீரர்களில் பாபர் அசாமும் (69 ரன், 7 பவுண்டரி), ஹாரிஸ் சோகைலும் (89 ரன், 59 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்து ரன்ரேட்டை 6 ரன்களுக்கு மேலாக உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
அடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஹசிம் அம்லா (2 ரன்), முகமது அமிரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு பாகிஸ்தான் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றது.
இதன் பின்னர் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினாலும் பேட்டிங்கில் தேவையான வேகம் இல்லை. சுழற்பந்து வீச்சில் திணறினார்கள். டி காக் 47 ரன்னிலும், பிளிஸ்சிஸ் 63 ரன்னிலும் (79 பந்து, 5 பவுண்டரி), அடுத்து வந்த மார்க்ராம் 7 ரன்னிலும், வான்டெர் துஸ்சென் 36 ரன்னிலும், டேவிட் மில்லர் 31 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் நெருக்கடிக்குள்ளான தென்ஆப்பிரிக்க அணியால் அதன் பிறகு நிமிரவே முடியவில்லை.
50 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 9 விக்கெட்டுக்கு 259 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6-வது லீக்கில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது 2-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் நூலிழை அளவுக்கு ஒட்டிக்கொண்டிருந்த தென்ஆப்பிரிக்காவின் அரைஇறுதி வாய்ப்பு இந்த தோல்வியின் மூலம் பொசுங்கிப் போனது. தென்ஆப்பிரிக்காவுக்கு இது 5-வது தோல்வியாகும்.