உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இன்று ஆஸ்திரேலியா, வங்காளதேசம் மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் முனைப்பு காட்டும்.
டேவிட் வார்னர் (281 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (343 ரன்), ஸ்டீவன் சுமித் (243 ரன்) ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க் மிரட்டுகிறார்கள்.
வங்காளதேச அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கும் ‘வேட்டு’ வைக்கும் நம்பிக்கையுடன் வியூகங்களை வகுத்துள்ளது. 2 சதம், 2 அரைசதம் உள்பட 384 ரன்கள் குவித்துள்ள ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் தான் அந்த அணியின் ஆணிவேராக இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டவுன்டானில் நடந்த ஆட்டத்தில் 322 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்த வங்காளதேச அணி ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சு தாக்குதலை திறம்பட சமாளித்து அசத்தியது. ஆனால் இது அதைவிட பெரிய மைதானம் என்பதால் ஷாட்பிட்ச் பந்து வீச்சை எதிர்கொள்வதில் கூடுதல் கவனமுடன் இருப்பார்கள்.
மொத்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் சவால் அளிக்க காத்திருப்பதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் அல்லது ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர்-நிலே, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன் அல்லது நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.
வங்காளதேசம்: தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், மெஹிதி ஹசன், முகமது சைபுதீன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஏற்கனவே இங்கு நடக்க இருந்த இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாட்டிங்காமில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்காற்று வீசும். லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.