உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – தமிழக வீரர் விஜய் சங்கர் சாதனை
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய்சங்கர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருவருக்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தவான் காயம் அடைந்ததால் விஜய்சங்கருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க வீரர் தவான் ஆடவில்லை. இதனால் 4-வது வரிசையில் ஆடும் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடினார்.
எனவே ராகுலின் இடமான 4-வது வீரர் வரிசைக்கு விஜய்சங்கர் தேர்வானார். தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும் ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
28 வயதான விஜய்சங்கர் உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்திலேயே பந்து வீச்சில் முத்திரை பதித்தார்.
நெல்லையைச் சேர்ந்த அவர் 5.2 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக், கேப்டன் சர்பிராஸ் அகமது ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தினார்.
புவனேஸ்வர்குமார் 3-வது ஓவரின் 4-வது பந்தில் காயம் அடைந்தார். இதனால் அவரது 2 பந்துகளை விஜய்சங்கர் வீசினார். தனது முதல் பந்திலேயே இமாம்-உல்-ஹக்கை அவர் எல்.பி.டபிள்யூ செய்தார்.
இதன் மூலம் உலக கோப்பையில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சர்வதேச அளவில் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 3-வது வீரர் விஜய்சங்கர் ஆவார். இதற்கு முன்பு பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ், ஆஸ்திரேலிய வீரர் இயன் ஹார்வி ஆகியோர் உலக கோப்பையில் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்து இருந்தனர்.
விஜய்சங்கர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்திக் கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றார்.