உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் 48 ஒவர்களாக குறைக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரதுல்லா ஸசாய் 22(23), நூர் அலி ஸத்ரான் 32(58), ரஷீத் கான் 35(25) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்து வெளியேறினர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ரஹ்மத் ஷா 6, ஹஷ்மதுல்லா ஷாஹிடி 8, அஸ்கர் ஆப்கான் 0, முகமது நபி 1, இக்ரம் அலி கில் 9, குல்படின் நைப் 5, ஹமீத் ஹசன் 0, அப்தாப் ஆலம் என அடுத்தடுத்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவரில் 125 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாகீர் 4, மோரிஸ் 3, ஆண்டில் பெஹ்லுக்வாயோ 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாஷிம் அம்லா, குயின்டன் டி காக் களம் இறங்கினர். ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை குவிக்க துவங்கினர். ஆட்டத்தின் 17 வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் தனது அரை சதத்தை எட்டினார். தென் ஆப்பிரிக்கா விக்கெட்டை வீழ்த்தும் நோக்குடன் பந்து வீசிய ஆப்கான் வீரர்களின் முயற்சி பலன் ஏதும் அளிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 20வது ஓவர் முடிவில் 91 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஹாஷிம் அம்லா, குயின்டன் டி காக் ஜோடி 100 ரன்களை கடந்த நிலையில், ஆட்டத்தின் 22.5வது ஓவரில் குல்படின் நைப் வீசிய பந்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக் 72 பந்துகளை சந்தித்து 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஆண்டில் பெஹ்லுக்வாயோ களம் இறங்கினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 28.4 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் குயின்டன் டி காக் 68 (72), ஹாஷிம் அம்லா 41 (83), ஆண்டில் பெஹ்லுக்வாயோ 17 (17) ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.