உலகக்கோப்பை கிரிக்கெட் – இன்று வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, வெஸ்ட் இண்டீசுடன் மல்லுகட்டுகிறது. பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்கவில்லை. இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா ஆகிய அணிகளிடம் வரிசையாக உதை வாங்கியுள்ள தென்ஆப்பிரிக்க அணி, எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியில் பரிதவிக்கிறது.
கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் ஆகியோரைத் தவிர மற்றவர்களின் பேட்டிங் மிகவும் கவலைக்குரிய வகையில் இருக்கிறது. பந்து வீச்சில் காஜிசோ ரபடா நம்பிக்கை அளிக்கிறார். ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்திலாவது எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே மைதானத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றிருக்கும் தென்ஆப்பிரிக்கா இந்த முறை சுதாரிப்போடு விளையாடும் என்று நம்பலாம்.
தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ரன்னில் சுருட்டி பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது. வெஸ்ட் இண்டீசை பொறுத்தவரை கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், ஆல்-ரவுண்டர்கள் ஆந்த்ரே ரஸ்செல், ஜாசன் ஹோல்டர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலசாலி அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி, துவண்டு போய் கிடக்கும் தென்ஆப்பிரிக்காவை மேலும் ரணகளப்படுத்த ஆயத்தமாக உள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 61 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 44-ல் தென்ஆப்பிரிக்காவும் 15-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு இல்லை. இவற்றில் உலக கோப்பையில் 6 முறை சந்தித்து 2-ல் வெஸ்ட் இண்டீசும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
தென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், பாப்டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், டுமினி, பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது பீரன் ஹென்ரிக்ஸ்.
வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், காட்ரெல், ஒஷானே தாமஸ்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.