உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் டான்டனில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ரன்களுக்கும், நூர் அலி ஸத்ரான் 31 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் மறு முனையில் சிறப்பாக ஆடிய நூர் அலி ஸத்ரான் அரை சதம் அடித்தார்.
41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் சேர்த்தது. அதிக பட்சமாக நூர் அலி ஸத்ரான் 59 ரன்கள் குவித்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், பெர்குசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தில் ஆலம் வீசிய பந்து வீச்சில் மார்ட்டின் கப்தில் அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனக்கான சிறப்பான பாணியில் களம் இறங்கி ரன்களை குவிக்க தொடங்கினார். இதனிடைய ஆட்டத்தின் 7.5 வது ஓவரில் காலின் முன்ரோ 22 (24) எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினர்.
ஆட்டத்தின் 25.4 வது ஓவரில் ஆலம் வீசிய பந்தில் ராஸ் டெய்லர் 52 பந்துகளை சந்தித்து 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டனார். இறுதியில் ஆட்டத்தின் 32.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக அணியின் கேப்டன் கடைசி வரை களத்தில் பொறுப்புடன் விளையாடி 79 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பாக அப்டாப் ஆலம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.