உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான நேற்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது.

வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் 24 ரன்களுக்கும், சவுமியா சர்க்கார் 10 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்காளதேச அணி, 244 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 64 ரன்களும், முகம்மது சைபுதின் 42 ரன்களும் குவித்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில் ஹென்றி 4 விக்கெட்டும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் முன்றோ களம் இறங்கினர். தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 5.1 ஓவரில் ஷகிப் அல்-ஹசன் பந்து வீச்சில் மார்ட்டின் குப்தில் 25 (14) எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த காலின் முன்றோ 24 (34) ஆட்டத்தின் 9.6 வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் மற்றும் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து தனது அணியின் ரன்களை குவிக்க தொடங்கினர். ஆட்டத்தின் 25 வது ஓவரில் நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் தனது அரை சதத்தை எட்டினார்.

ஆட்டத்தின் 31.1 வது ஓவரில் ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடியை பிரித்த வங்காளதேச அணி வீரர் மெஹிதி ஹசன், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 40 (72) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாக்கினார். அடுத்த வந்த டாம் லாதம் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஜேம்ஸ் நீஷம் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் இணைந்து ரன்கள் எடுத்த நிலையில் மொசாடெக் ஹூசைன் பந்து வீச்சீல் ஆட்டத்தின் 38.3வது ஓவரில் ராஸ் டெய்லர் 91 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து காலின் டி கிராண்ட்ஹோம் 15 (13), ஜேம்ஸ் நீஷம் 25 (33), மேட் ஹென்றி 6 (8) ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆட்டத்தின் 47.1 வது ஓவரில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 248 ரன்களை எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வென்றது. தொடர்ந்து களத்தில் நின்ற மிட்செல் சாண்ட்னர் 17 (12), லாக்ஸி பெர்குசன் 4 (3) ரன்கள் எடுத்தார்கள்.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 82 ரன்களும், கேன் வில்லியம்சன் 40 ரன்களும் குவித்தனர்.

வங்காளதேச அணியின் சார்பில் மெஹிதி ஹசன், ஷகிப் அல்-ஹசன், மொசாடெக் ஹூசைன், மொகமது சைபுதின் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news