X

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி – நாளை இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதல்

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினத்துடன் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிந்தன.

‘லீக்’ முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காள தேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘நாக்அவுட்’ போட்டிகள் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் முதல் அரை இறுதி ஆட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

‘லீக்’ முடிவில் 7 வெற்றி, 1 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியை தழுவி இந்தப் போட்டி தொடரில் மற்ற அணிகள் அனைத்தையும் வீழ்த்தி மிகவும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி நம்பிக்கையுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

இரு அணிகள் இடையேயான ‘லீக்’ ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணியின் சவாலை எதிர்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும். 4-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

இந்திய அணியின் ‘டாப் 3’ பேட்டிங் மிகவும் வலுவாக இருக்கிறது. இதை வைத்துதான் அணியின் ரன் குவிப்பு உள்ளது. தொடக்க வீரர் ரோகித்சர்மா 5 சதம், ஒரு அரை சதத்துடன் 647 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 27 ரன் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (673) சாதனையை முறியடிப்பார்.

மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் ஒரு சதம், 2 அரை சதத்துடன் 360 ரன்கள் குவித்து உள்ளார். இலங்கைக்கு எதிராக தொடக்க ஜோடி 189 ரன்களை குவித்தது போல அரை இறுதியிலும் திறமையை வெளிப்படுத்துவது அவசியமானது.

3-வது வரிசையில் விளையாடும் கேப்டன் விராட் கோலியும் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 5 அரை சதத்துடன் 442 ரன் குவித்து உள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையிலும், பின்கள வரிசையிலும் ரன்களை அதிரடியாக குவிப்பது முக்கியமானது. ரிசப்பந்த், டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரது பங்களிப்பு சிறப்பாக அமைய வேண்டும்.

4-வது வரிசையில் ஆடும் ரி‌ஷப்பந்த் இலங்கையை தவிர மற்ற ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆல்ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்டியா திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 194 ரன் எடுத்துள்ளார். 9 விக்கெட் கைப்பற்றி உள்ளார். டோனி ஒரு அரை சதத்துடன் 223 ரன் எடுத்து உளளார். விக்கெட் கீப்பர் பணியில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் பும்ரா மிகவும் நேர்த்தியான முறையில் வீசி வருகிறார். 17 விக்கெட் சாய்த்துள்ள அவர் அணியின் துருப்பு சீட்டாக இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட முகமது‌ஷமி (14 விக்கெட்) யசுவேந்திர சாஹல் (11 விக்கெட்) ஆகியோர் நாளைய அரை இறுதியில் இடம் பெறுகிறார்கள். புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகிய இருவர் நீக்கப்படலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு அமையும்.

நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் இந்தியாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

நியூசிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணி ‘லீக்’ சுற்றில் கடைசியாக ஆடிய 3 போட்டியிலும் தோற்றது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் வீழ்ந்து இருந்தது. இதை இந்தியா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கேப்டன்வில்லியம்சன் பேட்டிங்கில் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 2 சதம், ஒரு அரைசதத்துடன் 481 ரன்கள் குவித்து உள்ளார். இது தவிர ரோஸ் டெய்லர் (261), கிராண்ட்ஹோம், மார்டின் குப்தில், டாம் லாதம் போன்ற சிறந்த பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.

பந்து வீச்சில் டிரென்ட் போல்ட் (15 விக்கெட்), பெர்குசன் (17 விக்கெட்), ஹென்றி (10 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

ஜேம்ஸ் நீசம் ஆல்ரவுண்டு பணியில் முத்திரை பதித்து வருகிறார். அவர் 201 ரன் குவித்துள்ளார். 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: sports news