22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகளும் என்று மொத்தம் 12 அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும்.
இதில் ‘இ’ பிரிவில் இந்திய அணி இடம் பிடித்துள்ளது. ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி கண்டது. 2-வது ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் டிரா கண்டது.
இந்த நிலையில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
உலக தரவரிசையில் 187-வது இடத்தில் உள்ள வங்காளதேச அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கத்தாரிடம் தோல்வி கண்டது. 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் சொதப்பியதால் ஓமனிடம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாருக்கு சவால் அளித்து டிரா செய்ததன் மூலம் நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் சுனில் சேத்ரி இந்த போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேச அணியை வீழ்த்தி தனது வெற்றி கணக்கை தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 15 முறையும், வங்காளதேச அணி 11 தடவையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.