உலகக்கோப்பை இந்திய அணி – தொடர்ந்து வருத்தம் தெரிவிக்கும் கவுதம் காம்பிர்
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகிறது.
உலகக்கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகிய குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர்களும் ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களும் உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதலாக ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் தேவை என முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பிர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு குவாலிட்டி வேகப்பந்து வீச்சாளர் குறைவு என நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு உதவியான இன்னொருவர் தேவை. நாம் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோரை கொண்டுள்ளோம் என்று நீங்கள் வாதம் செய்யலாம், ஆனால், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும் என்பதால் இது சிறந்த தொடராக இருக்கும். இது நமக்கும் உண்மையிலேயே சிறந்த உலகக்கோப்பை சாம்பியனை வெளிப்படுத்தும். வருங்காலத்திலும் ஐசிசி இந்த முறையை கடைபிடிக்க வேண்டும்’’ என்றார்.