X

உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு – மெக்ராத்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒரு நாள் போட்டி அணியாகும். என்னை பொறுத்தமட்டில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அவர்கள் இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள். இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாக சொல்லுகிறேன். அந்த அணியின் நடப்பு பார்மும், ஆட்டமும் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அதிக ரன்களை குவித்து வருகிறது.

இங்கிலாந்து அணி தொடக்கம் முதல் கடைசி கட்டம் வரை நன்றாக ஆடுகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் 50 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடினால் அந்த அணிகளின் ஆட்டத்தில் 20 ஓவர் ஆட்டத்தின் அதிரடி தாக்கம் அதிகம் இருக்கும். இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானதாகும்.

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் நன்றாக செயல்படும் என்று நம்புகிறேன். தென்ஆப்பிரிக்காவும் நல்ல அணியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணியை கருப்பு குதிரை எனலாம். அந்த அணி நன்றாகவும் விளையாடும். மோசமாக செயல்படவும் வாய்ப்பு உண்டு. வெஸ்ட்இண்டீசும், பாகிஸ்தான் அணியும் ஒரே மாதிரி குணம் கொண்டவையாகும். இந்த உலக கோப்பை போட்டி சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும். இங்கிலாந்து, இந்தியா அணிகளை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு கடினமானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கையில் அந்த அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த அணியினர் தங்களுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

இவ்வாறு மெக்ராத் கூறினார்.

Tags: sports news