உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு – ரிக்கி பாண்டிங் கருத்து
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் திரும்பி இருப்பது போட்டியில் அணியின் ஆட்ட திறனை அதிகரிப்பதாக அமையும். அவர்கள் இருவரும் அணிக்கு வெளியே இருந்த போது ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. நான் மட்டுமின்றி ஒட்டு மொத்த அணியே அவர்கள் இருவரும் அணிக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டேவிட் வார்னர் நன்றாக விளையாடினார். ஸ்டீவன் சுமித் பீல்டிங் செய்கையில் சற்று தடுமாறினார். இருப்பினும் அவர் நல்ல பார்முக்கு வந்து விடுவார். உலக கோப்பையை தக்க வைத்து கொள்ள உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியினர் போராடுவார்கள். நிச்சயமாக எதிரணிகளுக்கு சவால் அளிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க் அணிக்கு திரும்பி இருக்கிறார். கம்மின்ஸ் நன்றாக பந்து வீசி வருகிறார். எங்களது பந்து வீச்சு பலம் அதிகரித்துள்ளது. ஆல்-ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
உலக கோப்பை போட்டி நீண்ட நாட்கள் நடக்கக்கூடியதாகும். அணியில் வலுவான மாற்று வீரர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். சரியான வேகப்பந்து வீச்சு இல்லை என்றால் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற முடியாது. ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக நாங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் அந்த அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதனால் இயற்கையாகவே இங்கிலாந்து அணிக்கு சில அனுகூலங்கள் இருக்கும். இருப்பினும் அந்த அணிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சவால் அளிக்கும். வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளும் வலுவானது தான். சாம்பியன் பட்டம் வெல்ல மிகவும் திறந்த வாய்ப்பு உள்ள போட்டி இதுவாகும். இதில் இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், மற்ற அணிகளும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.