X

உலகக்கோப்பையை வென்றால் வீராட் கோலியின் பெருமைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் – ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை அதிக அளவில் ருசித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஆனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை மட்டும் இன்னும் வெல்லவில்லை. 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து கோப்பையை முகரும் வாய்ப்பை இழந்தது.

கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. பேட்ஸ்மேனாக உலகளவில் சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலிக்கு கேப்டனாக உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற ஏக்கம் மட்டுமே உள்ளது.

அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை வென்றால் விராட் கோலிக்கு அது கூடுதல் பெருமை அளிக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘எந்தவொரு கேப்டனும் இந்த சாதனையை எட்ட விரும்புவார்கள். அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பையை வென்றால் சிறப்பானதாக இருக்கும். இது விராட் கோலியை மிகப்பெரியதாக உருவாக்காது. அவர் ஏற்கனவே மிகப்பெரிய வீரர். ஆனால், உலகக்கோப்பை வென்ற கேப்டன் என்பது அவருடைய பெருமைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதாக இருக்கும்’’ என்றார்.