இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து 123 ரன்கள் எடுத்திருக்கும் போது ஜேசன் ராய் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து 106 ரன்கள் எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் சேர்த்துள்ளது.
306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க வீரர்கள் நிக்கோலஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மார்டின் கப்தில் 8 ரன்னிலும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பின் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்களில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் அதிகபட்சமாக 57 ரன்கள் அடித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்துக்கு ஏதிரான இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.