X

உலககோப்பையில் இந்தியா எடுக்கும் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – காம்பீர் கருத்து

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அதை ஐசிசி ஏற்கவில்லை.

இந்நிலையில் 40 உயிர்களைவிட 2 புள்ளிகள் பெரிய விஷயம் அல்ல. இறுதிப் போட்டியில் மோதும் சூழ்நிலை இருந்தாலும் இரண்டு புள்ளிகளை இழக்க தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக நிபந்தனையற்ற தடை விதிக்க முடியாது என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதுகுறித்து பிசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு போட்டியிலும் விளையாடக்கூடாது. அல்லது அவர்களை எதிர்த்து விளையாட கதவை திறந்து வைக்க வேண்டும். புல்வாமாவில் நடந்த தாக்குதலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், நாம் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடுவதில்லை. அதேபோல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும். இது சிறந்த முடிவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இரண்டு புள்ளிகளை இழப்பதில் எந்த தவறும் இல்லை. 40 உயிர்களை இழந்திருப்பது மிகவும் முக்கியமானது. என்னுடைய பார்வையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றாலும், அதை புறக்கணிக்க வேண்டும். மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

2003 உலகக்கோப்பையின்போது இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே சென்று விளையாட முடியாது என்று முடிவு எடுத்தது. இதனால் அவர்கள் புள்ளிகளை இழந்தார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்துவிட்டால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுக்க ஒவ்வொருவரும் மனதளவில் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி கொள்ள வேண்டும்.

இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுப்பதால் விளைவுகள் கூட ஏற்படலாம். அதனால் நாம் அரையிறுதிக்கு முன்னேற முடியாத நிலை கூட ஏற்படலாம். அப்போது எந்தவொரு மீடியாக்களும் இந்திய அணி மீது குற்றும் சுமத்தக்கூடாது’’ என்றார்.

Tags: sports news