கொரோனா வைரஸ் பலவடிவங்களில் உருமாறி தாக்கி வருவதால் பாதிப்புகளும் அதிகம் ஏற்படுகிறது.
தற்போது உருமாறிய கொரோனாவை கண்டுபிடிக்க மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேயில் உள்ள தேசிய வைராலஜி பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இபோது இந்த நவீன வசதியுடன் கூடிய பகுப்பாய்வுகூடம் சென்னையில் தொடங்கப்பட உள்ளது.
இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நாட்டையே அச்சுறுத்திய கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து பல்வேறு உருமாற்றம் அடைந்துள்ளது.
பொதுவாக நமக்கு தெரிந்தது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய உருமாற்றங்கள்தான். இதில் டெல்டா வகைதான் 2-வது அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. உடனடியாக நுரையீரலைத்தான் தாக்கியது.
தொடர்ந்து கொரோனா பல உருமாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதில் முக்கால்வாசி நமக்கு தெரிவதில்லை. ஆனால் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கும்.
இந்த மாதிரி நேரங்களில் அந்த வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை பகுப்பாய்ந்து கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது.
இந்த மரபணு ஆய்வு கூடங்கள் பெங்களூர், ஐதராபாத், மணிப்பால், புனே உள்பட சுமார் 10 இடங்களில்தான் உள்ளது. இந்த ஆய்வகங்களுக்கு பல மாநிலங்களில் இருந்து மாதிரிகள் அனுப்பப்படுவதால் முடிவுகள் தெரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகிவிடுகிறது.
காலதாமதமாக கிடைக்கும் முடிவுகளால் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அதற்குள் வேகமாக பரவிவிடும். என்னவகை என்பதை கண்டுபிடித்து விட்டால் உடனடியாக அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
எனவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திலேயே இந்த நவீன மரபணு பகுப்பாய்வுகூடத்தை தொடங்க உத்தரவிட்டார். இதற்காக அமெரிக்காவில் இருந்து நவீன கருவிகள் வாங்கப்படுகிறது. இந்த கருவிகள் இன்னும் சில தினங்களில் வந்துவிடும்.
இந்த நவீன பகுப்பாய்வுகூடம் டி.எம்.எஸ்.வளாகத்தில் அமைகிறது. விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
இந்த ஆய்வகம் செயல்பட தொடங்கியதும் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் அடுத்தடுத்து அலைகள் உருவாவதை கட்டுப்படுத்த முடியும்.
அதாவது ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிலும் சிலருக்கு தொற்று ஏற்படுகிறது. சில இடங்களில் கொத்து கொத்தாக பரவல் ஏற்படுகிறது. எந்த நோயும் இல்லாத இளம் வயதினர் கொரோனா தாக்கி இரண்டு மூன்று நாட்களிலேயே அபாயகட்டத்துக்கு சென்று விடுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மூலம் தொற்றை உறுதிப்படுத்த முடியும். ஆனால் எந்தவகை வைரஸ் தாக்கி உள்ளது என்பது தெரியாது. அதேபோல் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இந்த மாதிரி பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து உடனடியாக முடிவை தெரிந்து கொண்டால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும். அதற்காகத்தான் இந்த நவீன மரபணு பகுப்பாய்வுகூடம் தொடங்கப்படுகிறது
ஏற்கனவே டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படும் ஆய்வகத்தில் இந்த அதிநவீன பரிசோதனைக்கு தேவையான சிலவசதிகள் இருக்கின்றன. அடுத்தடுத்த கட்டங்களுக்கு ஏற்ப தயாராகி கொண்டிருக்கிறோம்.
இந்த ஆய்வை மேற்கொள்ள ஒரு டாக்டர், மைக்ரோபயாலஜிஸ்ட், பயோ டெக்னாலஜிஸ்டு உள்பட 6 பேர் பெங்களூருக்கு அனுப்பப்பட்டு சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.