பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மானியத்துடன் கூடிய உரங்களை உழவர்கள் வாங்கும்போது, அவர்கள் சாதி பிரிவைத் (பொது/ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய உரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உர விற்பனைக் கருவியின் மென்பொருளில் இதற்கான வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
உழவுத் தொழில் சாதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. உர மானியமும் சாதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது உர மானியம் வழங்குவதற்கான சாதிப் பிரிவுகளை கோருவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசின் இந்த விதி உழவர்களை காயப்படுத்தியுள்ளது.
உர மானியம் பெறுவோரின் சாதிப் பிரிவுகளை அறிந்து அவற்றின் அடிப்படையில் உர மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் உழவர்கள் நடுவே ஏற்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்த சந்தேகத்தை உடனடியாக போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
உழவுத் தொழில் புனிதமானது; அனைவருக்கும் பொதுவானது. அதற்கான உர மானியம் பெறும் உழவர்களை சாதியின் அடிப்படையில் பார்ப்பது தவறு. எனவே, உரம் வாங்கும் உழவர்களின் சாதிப் பிரிவை கோரும் வசதியை விற்பனைக் கருவியின் மென்பொருளில் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.