உயிரிழந்த ராணுவ வீரர்கள் பெயரில் பண மோசடி! – காவல் துறை எச்சரிக்கை
காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டம் போர்க்களம் போல் மாறி உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர்.
பல்வேறு மாநிலங்களிலும் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், இதனை பயன்படுத்தி சிலர் பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர் என காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக, ‘சல்யூட் இந்தியன் ஆர்மி’ எனும் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்க போவதாகவும், இந்த கணக்கிற்கு மக்கள் தங்கள் நிதியை அளிக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ‘ராணுவ நல நிதி’ எனும் பெயரில் வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளனர். இதை உண்மையென்று நம்பி சிலர் பணம் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மும்பையில் உள்ள தனியார் அமைப்பு ஒன்று ரூ.17 லட்சம் வசூலித்து அந்தந்த குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க நேர்மையாக செயலாற்றி வருகின்றனர். இருந்த போதிலும் இது போன்ற மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்கள் மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்கி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இந்த மோசடி குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய நினைத்தால் அந்தந்த மாவட்டங்களின் ராணுவ அலுவலகத்துக்கு சென்று நேரடியாக நிதியுதவி வழங்கலாம். மாவட்ட ஆட்சியர் அல்லது தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கொடிநாள் நிதியாக எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம் என தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் கிரைம் அதிகாரி தெரிவித்துள்ளார்.