X

உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு பணி நியமன ஆணை! – முதல்வர் வழங்கினார்

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவத்தினர் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-2-2019 அன்று உத்தரவிட்டு, அத்தொகை உடனடியாக வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த துணை ராணுவ வீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-2-2019 அன்று உத்தரவிட்டார்.

பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பலியான துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கயத்தார் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: south news