Tamilசெய்திகள்

உயிரியில் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் சார்லி என்ற பெங்கால் புலிக்கும், சண்டாய் என்ற ஒராங்குட்டானுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  மேலும் மூன்று சிங்கங்கள், இரண்டு புலிகள் உள்ளிட்டவைகளுக்கும் வனவிலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட தனித்துவ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக எட்டு விலங்குகள் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டதாக சாண்டியாகோவின் பியூன் மிருகக்காட்சிசாலை
கால்நடை பிரிவு மருத்துவத்துறை தலைவர்  செபாஸ்டியன் செலிஸ் தெரிவித்தார். தடுப்பூசிகள் விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா, அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த பரிசோதனை நடைபெற்றதாகவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடிய விலங்குகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விலங்குகளை தாக்கும் கொரோனா வைரஸ் சிங்கப்பூர், ஜாக்ரெப் மற்றும் வாஷிங்டனில் உள்ள சிங்கங்களிடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் உள்ள நீர்யானைகள், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரான் வகை புலிகள், ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள
கொரில்லாக்களிலும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் புயின் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளும் கொரோனா வைரஸ்
பரிசோதனை செய்யப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள  பல்வேறு உயிரியல் பூங்காக்கள் விலங்குகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

சிலி நாட்டு மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் முழுமையான தடுப்பூசியைப் பெற்று விட்ட நிலையில் வன விலங்குகளுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கி உள்ள முதல் லத்தீன் அமெரிக்க நாடாக சிலி திகழ்கிறது.