சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 29வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காணொளி மூலம் தமிழக முதல்வர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.
பல்கலைகழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மேரி ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் இந்திராகாந்தி அனு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருண்குமார் பாதுரி கலந்து கொண்டு 3190 இளைநிலை மற்றும் முதுநிலை பட்டங்களையும்,129 முனைவர் பட்டங்களையும், 20 தங்க பதக்கங்களையும் வழங்கினார்.
காணொளியில் தமிழக முதலமைச்சர் பேசியதாவது:-
கல்விச் சேவையை சிறப்பாக செய்வதால் தான் உலகின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் கல்வி கற்க வருகின்றனர்.
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் நிறுவனர் முனைவர் ஜேப்பியார் அவர்களின் அயராத உழைப்பினால் கல்லூரி என்ற நிலையில் இருந்து பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
கல்வி சேவையில் இந்த நிறுவனம் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் இன்று பட்டம் பெற உள்ள 3190 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், 129 முனைவர் பட்டம் பெரும் மாணவர்களுக்கும், 20 தங்க பதக்கம் பெறும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்து தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
2019-20ம் ஆண்டில் 16 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2011-12ம் ஆண்டு முதல் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 1577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
2020-21ம் ஆண்டு உயர்கல்விக்காக 5502 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
கொரோனா தொற்று தாக்கத்தால் தொழில் துறையில் மந்தநிலையிலும் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
பட்டம் பெற்று வெளியில் வருபவர்கள் சுயதொழில் துவங்க முன்வர வேண்டும்.
நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். பட்டம் பெற்று புதிய உலகத்திற்கு செல்லும் நீங்கள் உணர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கடுமையான உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் நல்ல மதிப்பெண்களை பெற்றவர்களை மனதார பாராட்டுகிறேன்.
வருங்கால தலைவராகிய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.