உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ‘சர்க்கரை நோய்’ என வழக்கத்தில் அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்று. ஆங்கிலத்தில் ‘டயாபடிஸ்’ (diabetes) என அழைக்கப்படும் நீரிழிவில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகை உள்ளது. நீரிழிவு நோய்க்கான காரணங்களையும், அதை கட்டுக்குள் வைப்பதற்கான வழிமுறைகளையும் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சுமார் 4 லட்சம் பேரிடம் 12 வருடங்களாக இங்கிலாந்தில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் தரவுகளை பெற்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தின் டுலேன் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ‘அப்சர்வேஷனல் ஸ்டடி’ (observational study) என அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு ஆய்வுகளில் ஒரு காரணியை நோய்க்கான நேரடி காரணம் என குறிப்பிட முடியாவிட்டாலும், நோயை உண்டாக்குவதில் மறைமுக தொடர்புடைய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நாம் சமைக்கும் உணவு மற்றும் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளின் மூலமாக உட்கொள்ளப்படும் உப்பு, நீரிழிவு நோய்க்கு ஒரு மறைமுக தொடர்பு உள்ள காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு 8 கிராம் உப்பு, மக்கள் உட்கொள்ளும் சமைத்த மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவின் மூலமாக உடலுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த அழுத்தம் கூடும் பொழுது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலினின் செயலாக்கம் குறைந்து விடுகிறது. டுலேன் பல்கலைகழக ஆய்வில் உப்பின் அளவு கூடுவதால் கார்டிசால் எனப்படும் ஹார்மோன் அளவு அதிகரிப்பதும், இதன் காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உப்பை குறைப்பதால் சர்க்கரை கட்டுக்குள் இருப்பதாகவோ அல்லது உப்பு கூடுவதால் சர்க்கரை அதிகரிப்பதாகவோ கூற இந்த ஆய்வில் நேரடி ஆதாரம் இல்லை. இருந்தாலும், உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ரத்த அழுத்தம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகிய இரண்டுமே உள்ள நோயாளிகளுக்கு, உட்கொள்ளும் உப்பின் அளவு குறைவதனால் ரத்த அழுத்தம் குறைவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி இருந்த 5 கிராம் தினசரி அளவை விட, இந்தியர்கள் அதிகமாக 9லிருந்து 10 கிராம் வரை உப்பை உட்கொள்கிறார்கள் என சமீபத்தில் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.