உன்னாவ் பகுதியில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை!
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே உன்னாவ் பகுதியில் 23 வயது இளம்பெண், ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டுக்கு சென்ற வழியில் அந்த பெண் மீது ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது.
அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைத்து பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த கொலை வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அந்த சிறுமி ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை காண வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அப்பகுதி முழுவதும் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தார். சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
சிறுமியை கடத்திய மர்மநபர்கள் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. சிறுமி கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் கிடந்தன. எனவே மதுபோதையில் கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மீது கற்பழிப்பு, கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.