உத்தவ் தாக்கரேவுக்கு சோனியா காந்தி போட்ட நிபந்தனைகள்!
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இருகட்சிகளும் தலா 2 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்தது.
இதனால் பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொண்ட சிவசேனா, கொள்கையில் மாறுப்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து கடந்த நவம்பர் மாதம் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்துத்வா கொள்கை உள்ளிட்ட பிரச்சினையில் கூட்டணி கட்சிகள் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் தாக்கரே அரசில் பொதுப்பணித்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வரும் அசோக் சவான் தனது சொந்த மாவட்டமான நாந்தெட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பாக பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “அரசியலமைப்பு சட்டபடி ஆட்சி நடத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தவ் தாக்கரேயிடம் எழுதி வாங்கி கொள்ளுமாறு சோனியா காந்தி எங்களிடம் தெரிவித்தார். அதனை நாங்கள் உத்தவ் தாக்கரேயிடம் தெரிவித்தோம். எதிர்பார்ப்புக்கு விரோதமாக அரசு செயல்பட்டால், ஆட்சியில் இருந்து காங்கிரஸ் மந்திரிகள் வெளியேற வேண்டும் என்றும் சோனியா எங்களிடம் தெரிவித்தார். அதனையும் உத்தவ் தாக்கரே கவனத்துக்கு கொண்டு சென்றோம். இவற்றை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டதால், ஆட்சி அமைய நாங்கள் ஆதரவு அளித்தோம்” என்றார்.
அசோக் சவானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்சி அமைப்பதற்காக நடந்த உள் ஒப்பந்தங்கள் குறித்து சிவசேனா விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
அசோக் சவான் வெளியிட்ட கருத்துக்கு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் கூறுகையில், “3 கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயாரித்தோம். அதில் 3 கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டு உள்ளனர். அசோக் சவான் கூறியது போல எதுவும் இல்லை” என்றார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து நேற்று மந்திரி அசோக் சவான் விளக்கம் அளித்தார். அதில் அவர், “3 கட்சிகளும் சேர்ந்து தயாரித்த குறைந்தபட்ச செயல் திட்டம் பற்றி தான் நான் பேசினேன். அதில் கையெழுத்து போட்டு உள்ளோம். ஆனால் நான் பேசியது திரித்து கூறப்பட்டு வருகிறது. நான் யாருக்கு எதிராகவும் பேசவில்லை. எங்களது கூட்டணி அரசு நன்றாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
கொள்கையில் முரண்பட்ட கட்சிகள் இணைந்து நடத்தும் ஆட்சி நீடிக்குமா? என்பது பற்றி ஏற்கனவே பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது 3 கட்சிகள் இடையே ஏற்பட்டு உள்ள முட்டல், மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.