Tamilசெய்திகள்

உத்தர பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்

உத்தர  பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள நௌரங்கியா கிராமத்தில்  ஒரு வீட்டில் திருமண விழாவின் போது, சடங்கு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்தனர்.

அதிக பாரம் தாங்காமல் பலகை உடைந்ததில் பெண்கள், சிறுமிகள் உள்பட 13 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் 13 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து நடந்த இடத்தை குஷிநகர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருமண விழாவில் கிணற்றில் தவறி விழுந்து 13 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளும் வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.