இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வந்தார்.
அப்போது, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு தரப்பினரிடையே இதுகுறித்து விமர்சனங்கள் எழும்பியது.
அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.
ரஜினிகாந்த் தனது பயணங்களை முடித்துக் கொண்டு, விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய என்னை வாழ வைத்த செல்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகின் அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்” என்றார்.