Tamilசெய்திகள்

உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 4 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. 17 மாநகராட்சி, 199 நகராட்சி மற்றும் 52 நகர பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடந்தது.

மொத்தம் 14 ஆயிரத்து 522 பதவி இடங்களுக்கு 83 ஆயிரத்து 378 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பதிவானது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடந்தது. இதற்காக 353 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் ஆளும் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 16 மாநகராட்சிகளிலும் பா.ஜனதா தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தது. இதனால் அந்த மாநகராட்சிகளையும் பா.ஜனதா கைப்பற்றுகிறது. ஒரு மாநகராட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெற்றது.

காலை 11 மணி நிலவரப்படி 94 நகராட்சிகளில் பா.ஜனதா முன்னிலை பெற்றது. 39 நகராட்சிகளில் சமாஜ்வாடி கட்சி, 19 இடங்களில் பகுஜன் சமாஜ், 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றன. மற்றவை 41 இடங்களில் முன்னிலையில் இருந்தன. பஞ்சாயத்துகளில் பா.ஜனதாவின் முன்னிலை எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்தது. அக்கட்சி 212 பஞ்சாயத்துகளில் முன்னிலை பெற்றது.

சமாஜ்வாடி 130 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 23 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு அமோக முன்னிலை கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு சமாஜ்வாடி சில இடங்களில் கடும் போட்டியாக விளங்கியது.