உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், வாக்குச்சாவடி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் எத்தனையோ ஊழல் நடந்துள்ளது. மக்கள் பணம் சுரண்டப்படுகிறது. ஆனால், போலீஸ் அதிகாரியை பாதுகாக்க மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதாவினரை திரிணாமுல் காங்கிரசார் கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் வன்முறை மூலம் பதில் சொல்லப் போவதில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘தாமரை’ பொத்தானை அழுத்துவதன் மூலம் பதில் அளிப்போம்.
உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதை மம்தா பானர்ஜி தடுக்கிறார். பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு சிறிய மைதானத்தையே ஒதுக்குகிறார். மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறப்போகிறது. அதனால்தான், மம்தா இப்படியெல்லாம் செய்கிறார்.
உத்தரபிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்திருக்கலாம். ராகுல் காந்தியையும் இழுக்கக்கூடும். ஆனால், இதையெல்லாம் மீறி, உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் 70 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று நான் சொன்னபோது, அதை அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்தார். ஆனால், அதைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றோம். 2017-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, 325 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். மற்ற கட்சிகளில் இருந்து பா.ஜனதா வேறுபட்டது. இங்கு வாக்குச்சாவடி நிர்வாகிகளால்தான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. எந்த தலைவராலும் அல்ல. இந்த தேர்தல், மோடிக்கும், மற்றவர்களுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்.
பிரதமர் மோடி, இந்தியாவின் பெயரை உலக அரங்கில் நிலை நிறுத்தி உள்ளார். ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவ வீரர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். அதற்கு 10 நாட்களில் துல்லிய தாக்குதல் மூலம் மோடி அரசு பதிலடி கொடுத்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே இப்படி செய்து வந்தன. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பா.ஜனதா விரும்புகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.