உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான். பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடி. மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குர்பான் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த குர்பானை பிடிக்க உத்தரபிரதேச போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
குர்பான் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் உத்தரபிரதேச போலீசார் அறிவித்து இருந்தனர். இதுபோல சுல்தான்பூர் போலீசாரும் குர்பான் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் கவுசாம்பி மாவட்டம் மஞ்சன்பூர் பகுதியில் உள்ள ஒரு சர்க்கரை ஆலை அருகே குர்பான் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் அதிரடி படை போலீசார், மஞ்சன்பூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரவுடி குர்பானை போலீசார் கண்டுபிடித்தனர். அவனை சரணடையும்படி போலீசார் கூறினர். ஆனால், அவன் சரணடைய மறுத்து போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். போலீசார் நடத்திய என்கவுண்டரில் ரவுடி குர்பான் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தான். அவனை மீட்ட போலீசார், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கவுசாம்பி மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரிஜேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
கவுசாம்பி மஞ்சன்பூரில் ரவுடி ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அதிரடி படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த ரவுடி போலீசாரை நோக்கி சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டதில் அவன் மயங்கி விழுந்தான். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்தியதில் அந்த ரவுடி இறந்திருப்பது தெரியவந்தது.
இறந்த ரவுடி யார்? என விசாரித்த போது, அவன் போலீசார் தேடிய குர்பான் என தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து ரவுடிகளை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் இதுவரை 10,900 என் கவுண்டர்கள் நடந்துள்ளன. இதில் 185-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்று குர்பான் என்ற ரவுடியும் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்