உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் கடந்த வாரம் போலீசார் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ்காரர் பெத்ஜீத்சிங் என்பவர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். ஆனால் அதில் இருந்தவர்கள் நிற்காமல் சென்றதோடு, தங்களை தடுத்த போலீஸ்காரர் பெத்ஜீத் சிங்கை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் 25 இடங்களில் படுகாயம் அடைந்த பெத்ஜீத்சிங் பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்தவர்களை பிடிக்க ஐ.ஜி.பிரசாந்த் குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் போலீஸ்காரர் பெத்ஜீத்சிங்கை கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.
இதில் போலீஸ்காரர் பெத்ஜீத்சிங்கை கொன்றவர்கள் ஜலான் பகுதியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கல்லு என்கிற உமேஷ் என தெரியவந்தது. பிரபல ரவுடிகளான இருவரும் அந்த பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பி யோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிபிடித்ததும், இருவரும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டனர். உடனே போலீசார் அவர்களை நோக்கி திருப்பி சுட்டனர். இதில் இருவரும் குண்டுபாய்ந்து இறந்தனர்.
இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. உத்தரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பிரபல ரவுடி ஒருவர் போலீஸ் கண்முன்பே சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது 2 ரவுடிகளை போலீசாரே என்கவுண்டர் செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.