உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை மந்திரி அமித் ஷா இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கவர்னர் குர்மித் சிங் ஆகியோரும் உடன் சென்றனர்.
அதன்பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு மருத்துவக்குழுவினரை அனுப்பும்படி மாநில அரசை கேட்டுக்கொண்டார்.
குமான் பகுதியில் சேதத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா, மத்திய மற்றும் மாநில அரசின் நிறுவனங்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து பணிகளை மேற்கொண்டதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆனால், மாநிலத்திறகு உடனடி நிவாரணம் எதையும் அவர் அறிவிக்கவில்லை.
மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குமான் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மாநிலத்தில் மூன்று நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையால் 7,000 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை விரைவில் சரி செய்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.