Tamilசெய்திகள்

உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபை தேர்தல் – பா.ஜ.க முன்னிலை

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 202 தொகுதிகளில் வெற்ற பெற வேண்டும் என்ற நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி 248 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. இதனால் கருத்துக்கணிப்புகள் கூறியபடி, பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவாலாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி 115 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

காலையில் கோவா மாநிலத்தில் இழுபறி நிலை காணப்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. திரினாமுல் காங்கிரஸ் 4 இடத்திலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் இருந்தன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் மற்ற கட்சிகள்
4 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

மணிப்பூர் மாநிலத்தில் காலையில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அந்த கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடத்திலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

அதன்பின்னர் 10 மணிக்கு பிறகு முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. உத்தரகாண்டில் பாஜக 43 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.

கோவாவில் பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. எனவே, இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் 21 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

இதேபோல் மணிப்பூரிலும் பாஜகவின் கை ஓங்கி உள்ளது. 10.30 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்தது.