தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் பேய்மழை பெய்தது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 4 மாநில சாலைகள், 10 லிங்க் ரோடு சேதமடைந்து போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. மந்தாகினி, அலாக்நந்தா அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சோன்பிரயாக், கவுரிகுண்ட் பகுதியில கேதர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 115 முதல் 204 மி. மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உத்தரகாண்ட் கனமழை குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில் ”ஒவ்வொரு வருடமும் பருவமழையின் போது நாம் இயற்கை பேரழிவை எதிர்கொண்டு வருகிறோம். அதிக மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படடுள்ளது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. நாம் முழு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம். அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநில பேரிடர் மீட்புக்குழு அவர்களுடைய வேலையை திறம்பட செய்து வருகிறாரக்ள்.
எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மற்ற அமைப்புகளும் பணியில் இறங்கியுள்ளனர். பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாராக உள்ளோம்” என்றார்.