உதவி மட்டும் இல்லை என்றால் உக்ரைன் ஒரு வாரம் தாங்காது – அரஷ்ய அதிபர் புதின்
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் ஏராளமாக சேதங்களும் உயிரிழப்புகளும் நடைபெற்றும் போர் 590 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு உள்ள கடன் ரூ. 2,74,63,90,35,00,00,000 (33 டிரில்லியன் அமெரிக்க டாலர்) எனும் அளவை தொட்டு விட்டதால், அந்நாட்டில் செலவினங்களை குறைக்க கோரி பெரும் விவாதங்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. இந்த விவாதங்களில் ரஷிய உக்ரைன் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தற்போது வரை வழங்கிய பல கோடி நிதியுதவி ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது. தற்போதுள்ள சூழலில் முன்பு போல் இனியும் அமெரிக்காவால் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதி உதவி அளிக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவி தடைபடும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரிவித்தார். இப்பின்னணியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒரு சந்திப்பில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக ஒரு வாரத்திற்கு மேல் போரில் தாக்கு பிடிக்க முடியாது. மாதாமாதம் உக்ரைன் பெறும் நிதியுதவியினால் ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறது. உதவி நின்றால், ஒரு வாரத்தில் அனைத்தும் நின்று விடும். நிதியுதவி மட்டுமல்ல; ராணுவ தளவாட உதவிகளும் நிற்க தொடங்கினால், ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும். தற்போது வரை ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் போரிட்டதில், உக்ரைன் 90 ஆயிரம் வீரர்களுக்கு மேல் இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, “அமெரிக்காவை போன்று நிதியுதவியோ ராணுவ உதவியோ உக்ரைனுக்கு நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியாது,” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைக்கான தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்தார். புதின் கூறியவாறு அமெரிக்க உதவி தடைபட்டு, போர் ரஷியாவிற்கு சாதகமாக சென்றால் அதனால் எற்பட கூடிய பாதிப்புகள் குறித்து அரசியல் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.