Tamilசெய்திகள்

உதவி பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி கட்டாயமாக்க கூடாது – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்ட தகுதியை (பி.எச்.டி.) கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட்டு இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் கூட, போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் செய்யப்படும் இந்த சீர்திருத்தம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். முனைவர் பட்ட ஆய்வுக்காக பதிவு செய்தல், ஆய்வு ஏட்டை தாக்கல் செய்தல், நேர்காணல் என ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை போக்க வேண்டும். முனைவர் பட்டம் மேற்கொள்வதற்கான செலவுகளையும் குறைக்க வேண்டும். இதை செய்துவிட்டு, அதன்பின்னர் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்பட்டால், அது உயர்கல்வி தரத்தை உயர்த்த உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.