கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
பா.ஜனதாவினர் பேச மட்டுமே செய்வார்கள். அந்த கட்சியில் உள்ளவர்கள், சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜீவன் கூட பங்கேற்கவில்லை. ஆங்கிலேயர்கள் ஆண்டால் அதுவே மேல் என்று சொன்னவர்கள் பா.ஜனதாவினர்.
சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜனதாவில் உள்ளவர்கள் காட்டி கொடுத்தவர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் மட்டுமே சுதந்திர போரட்டத்தில் பங்கெடுத்தன.
பா.ஜனதாவின் வரலாறு ஒரு துரோக வரலாறு. உத்தரபிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. ஒரு கருத்தை சொன்னால் தலையை எடுத்து விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட மிகப்பெரிய வன்முறை வாதிகள் கிடையாது. கருத்து சொன்னாலே தலை போய்விடும் என்றால் தேசத்தின் ஜனநாயகம் எங்கு உள்ளது.
அந்த தேசத்தை ஆளும் கட்சி எவ்வளவு பெரிய சர்வாதிகார கட்சி. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.ஐ நாங்கள் ஹிட்லர், முசோலினி என சொல்வது பொருத்தமானது என்பதற்கு இந்த கருத்து உலகத்திற்கே உதாரணமானது.காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால் சனாதனம் குறித்த கருத்துக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளார். அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்லலாம். எல்லை தாண்டி மட்டுமே போகக்கூடாது.
சனாதனம் கூடாது என புதிதாக யாரும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் நிலவுகிறது. கடவுள் மீதும், மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ராமானுஜர், தலித்துகளையும், விளிம்பு நிலை மக்களையும் அழைத்து வந்து பூணூல் அணிவித்து அந்தணர் ஆக்கினார்.
உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் சொன்னதை தற்போது அமைச்சர் உதயநிதி சொல்லி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை மட்டும் தான் அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு.
அறிவிலிகள் மத்தியில் வாழ்வது மிகப் பெரிய சிரமம். சனாதனம் கூடாது என்றால் இந்து மதத்திற்கு விரோதம் என்று ஏன் நினைக்கிறார்கள். சனாதனம் என்பது பழமை வாதத்தை, தீண்டாமையை, பெண் அடிமையை நிலை நிறுத்துவது. பிறப்பின் லட்சியத்தை ஈடேற்றுங்கள் என சனாதனத்தின் மூலம் நாகரீகமாக சொல்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத்துறையை மூட நம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர்பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தப்பு கிடையாது. அவரை நீக்க வேண்டியதும் கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் காமராஜ், தனசிங் பாண்டியன், சொக்கலிங்க குமார், ராஜேஷ்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.