மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ‘மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 50-நாட்களை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் என பலர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜிடம் ரத்னவேலு கதாபாத்திரம் கொண்டாடப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “மாமன்னன் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்று உருவாக்கப்பட்ட படம். இந்த படம் மக்களிடம் சேர்ந்துள்ளது. இந்த படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் சேர்வதற்காக தான். ஒரு படம் என்பது நான்கு நாட்களில் முடிந்து போவது இல்லை. படங்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். அப்போது எல்லா கதாபாத்திரங்களும் நிறம் மாறும் அதன் நிலையை சென்று அடையும் உண்மையை பேசும். உண்மையை பேசுவதற்காக தான் படங்கள் உருவாக்கப்படுகிறது. படம் பார்க்க பார்க்க உண்மையை பேசிக் கொண்டே இருக்கும்” என்று பேசினார்.