உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும் – பிரதமர் மோடி பேச்சு
தினை அல்லது ஊட்டச்சத்து தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையை உருவாக்கி, 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்தது.
இந்தியாவின் முன்மொழிவை 72 நாடுகள் ஆதரித்தன. இதையடுத்து, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2023ம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவித்தது. இந்நிலையில், புதுடெல்லி பூசாவில் (PUSA) உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி வளாகத்தில் உலகளாவிய தினை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், சர்வதேச தினை ஆண்டு- 2023ன் அஞ்சல் முத்திரை மற்றும் ரூ.75 நாணய நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,” இந்தியாவின் முன்மொழிவு மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு சர்வதேச தினை ஆண்டை நமது நாடு முன்னெடுத்துச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன். இது உலக நன்மைக்கான இந்தியாவின் அதிகரித்து வரும் பொறுப்பின் சின்னம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தினை அல்லது ஸ்ரீ அன்னை சர்வதேச திட்டமாக மேம்படுத்த இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் இல்லாமலும், தினையை எளிதாக பயிரிட முடியும். இந்தியாவின் தினை திட்டம், நாட்டில் உள்ள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் சவால்களைச் சமாளிக்க தினை உதவும். இன்றைய தேசிய உணவு பட்டியலில் தினை 5-6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதன் பங்கை அதிகரிக்க இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பண்ணை நிபுணர்கள் துரிதமாக உழைக்க வேண்டும். அதற்கு நாம் அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
உணவு பதப்படுத்தும் துறைக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. தினை சார்ந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.