Tamilவிளையாட்டு

உடல் தகுதி பயிற்சியை தொடங்கிய ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையே ஐ.பி.எல்.-ல் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தான் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். ஆனால் அவர் 70 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறினார். இதனால் அவரது காயத்தன்மை விவகாரம் சர்ச்சையானது. பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை நேற்று தொடங்கினார். முழு உடல்தகுதியை எட்டியதும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை பின்பற்ற வேண்டி இருப்பதால் வெகுவிரைவில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார். இதே போல் காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த ஷர்மாவும் தேசிய அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.