X

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் – உளவுத்துறை விசாரணை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. 13 நாட்களுக்கும் மேலாக போர் நீடித்து வருவதால் அங்கு தங்கி மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள், வேலை பார்த்து வரும் இந்தியர்கள் அனைவரும் உக்ரைனில் இருந்து நாட்டிற்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மட்டும் வர மறுத்து, உக்ரைனில் ராணுவத்தில் சேர்ந்து ரஷியாவிற்கு எதிராக போரிடும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது52). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜான்சி லட்சுமி என்ற மனைவியும், சாய் நிகேஷ், சாய் ரோஷித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சாய்நிகேஷ் காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தார். சிறுவயது முதலே அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடித்ததுமே, இந்திய ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

2 முறை முயன்றும், உயரம் குறைவு காரணமாக அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க ராணுவத்தில் சேரலாம் என நினைத்துள்ளார்.

இதற்காக சென்னை சென்று, அங்குள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகி ராணுவதில் சேருவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவர்கள் நடத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றார். ஆனாலும் அவருக்கு, அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்திய ராணுவம், அமெரிக்க ராணுவத்தில் சேர முயற்சித்தும் கிடைக்காததை அடுத்து சாய் நிகேஷ் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் படிக்க முடிவு செய்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள நே‌ஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தார். மற்ற மாணவர்களுடன் இணைந்து படிப்பில் கவனம் செலுத்தினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வந்த சாய் நிகேஷ் இங்கு விடுமுறையை கழித்து விட்டு சென்றார். உக்ரைனில் இருந்தாலும் தினமும் தனது பெற்றோருக்கு போன் செய்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் சாய் நிகேஷ் தனது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தனக்கு உக்ரைனில் உள்ள வீடியோ கேம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை கிடைத்து உள்ளதாக கூறினார். பெற்றோரும் வேலை கிடைத்தாலும் படிப்பிலும் கவனம் செலுத்துமாறு கூறினர்.

சாய் நிகேசுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் படிப்பு முடிகிறது. இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா போர் ஏற்பட்டதை அடுத்து அவரை தொடர்பு கொண்ட பெற்றோர், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வருமாறு அழைத்தனர்.

ஆனால் அவர் அதற்கு வர மறுப்பு தெரிவித்ததுடன், ஒரு அதிர்ச்சி தகவலையும் பெற்றோரிடம் தெரிவித்தார். நான் வீடியோ கேம் நிறுவனத்தில் வேலை பார்க்க வில்லை. ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்து கொண்டே இருந்தது. அப்போது தான் இங்குள்ள ஜார்ஜியா நே‌ஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது அதில் தான் பணியாற்றி வருகிறேன்.

உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளதால் அந்த போரில் நானும் பங்கேற்று ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாக கூறியுள்ளளார்.

இதை கேட்டதும் பதறி போன பெற்றோர் அவரை உடனடியாக நீ அங்கு இருக்க வேண்டாம். புறப்பட்டு வா. என பல முறை அழைத்துள்ளனர். ஆனாலும் அவர் வர மறுப்பு தெரிவித்ததுடன், நான் பாதுகாப்பாக தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாததாலும், போன் சுவிட்ச் ஆப் என வந்ததாலும் பெற்றோர் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் தங்கள் மகன் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த விவரத்தை இந்திய வெளியுறவு துறைக்கு தெரிவித்து அவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மாணவர் சாய்நிகேஷ் எப்போது உக்ரைன் படிக்க சென்றார், அவர் உக்ரைன் ராணுவத்தில் சேருவதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

உக்ரைனில் இருந்து மக்கள், மாணவர்கள் திரும்பி வரும் நிலையில் தமிழக மாணவர் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.