Tamilசெய்திகள்

உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரம் இந்திய நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உள்ளது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மும்பையில் நிதி ஸ்திரத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில், ரஷியா-உக்ரைன் மோதல் விவகாரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த 2 பிரச்சினைகளும் இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் பிரச்சினைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த பதற்றத்தால் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

கச்சா எண்ணெய் விலை எப்படி போகும் என்று கணிப்பது கடினம். தற்போது, பீப்பாய்க்கு 96 டாலராக உள்ளது. விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் சில்லரை விலையை மாற்றி அமைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்.

எல்.ஐ.சி.யின் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடம் விண்ணப்பித்தவுடன் பங்குச்சந்தையில் ஆர்வம் எழுந்துள்ளது.

தேசிய பங்குச்சந்தையில் நிகழ்ந்த தவறுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.