Tamilசெய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்க இது தான் காரணம்!

 

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதே போல ரஷியாவின் போர் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங்கில் நடந்த கூட்டத்தில் ரஷியாவின் போரை கண்டிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க மறுத்து விட்டது. இந்த பிரச்சினையில் இந்தியா நடுநிலை கடைப்பிடிக்க விரும்புவதாகவும் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் ரஷியாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்க மறுத்து விட்டது. உலகில் பல நாடுகளும் ரஷியாவை எதிர்க்கும் நிலையில் இந்தியா இந்த பிரச்சினையில் நடுநிலைமையை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு பல்வேறு வரலாற்று காரணங்கள் கூறப்படுகிறது.

ரஷியாவும், இந்தியாவும் நீண்ட காலமாகவே நட்பு நாடுகளாக உள்ளன. இந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு வரலாற்று ரீதியாக வேர்களை கொண்டது. இந்தியா மற்றும் ரஷியா இடையேயான நட்புணர்வு ஆகாயம், பூமி மற்றும் நீர் வழியில் இணைந்துள்ளது.

சுதந்திரம் பெற்றது முதலே ரஷியா, இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் போர் திறன் சார்ந்த உதவிக்கு முன்வந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் உரத்தொழிற்சாலை முதல் டாங்கிகள் தொழிற்சாலைகள் வரை மிக்ரக விமானங்கள் அல்லது சுகோய் விமானங்கள் என இந்திய ராணுவத்திற்கு ரஷியாவின் உதவி இருந்து வந்துள்ளது.

அணுசக்தி துறையில் இந்தியாவின் முதலீடு ரஷியா நாட்டில் இருந்து தான் தொடங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகள் ரஷியா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. விண்வெளியை பொறுத்தவரை இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா ரஷியாவால் 1975-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது.

ரஷியா செலுத்திய விண்வெளி வாகனத்தில் 1984-ம் ஆண்டு இந்திய வீரர்கள் பயணம் செய்தனர். இதே போல மருந்து தயாரிப்பு துறையிலும் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு இருப்பதால் உலக தரம் வாய்ந்த மருந்துகள் இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் ஆயுத தொழிற்துறை ரஷியாவின் ஆதரவை நம்பி உள்ளது.

இதுமட்டுமல்ல பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷியா நேசக்கரம் நீட்டியதையும் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. அதாவது கடந்த 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி எதிர்பாராத நேரத்தில் ஆக்ரா தளம் உள்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மீது பாகிஸ்தான் கடுமையான தாக்குதலை நடத்தியது.

உடனே அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போர் தொடங்கியது என்று அறிவித்தார். இந்தியாவில் முப்படைகளும் பாகிஸ்தானை சூழ்ந்து மிகப்பெரிய தாக்குதல் தொடங்கின. 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இரவு இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை சின்னா பின்னமாக்கி இந்திய எல்லையை அடைந்தது. அப்போது திடீரென மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்கின. இதனால் அப்போது வரை இந்தியாவின் கைக்குள் இருந்த போர்க்களம் மெல்ல நழுவ ஆரம்பித்தது. இந்த போரின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது.

அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் ஜோர்டன், ஈரான், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளோடு போர் விமானங்களை பாகிஸ்தானில் நிறுத்த சொல்லி உத்தரவிட்டார். மேலும் அமெரிக்க கடற்படையும், பிரிட்டன் கடற்படையோடு சேர்ந்து இந்திய நகரங்களை தாக்க வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வைத்தார். மேலும் தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்கு உதவுமாறு சீனாவையும் அழைத்தார். இவ்வாறு வல்லரசு நாடுகள் பலவும் இந்தியாவுக்கு எதிராக நின்றன.

அப்போது அமெரிக்காவை நடுநடுங்க வைத்த சோவியத் யூனியன் இந்தியாவுக்கு ஆதரவாக போர்களத்தில் களமிறங்கியது. இந்தியா மீது துரும்பு பட்டாலும் நேரடியாக உங்கள் நாடுகளை தாக்குவோம் என ரஷியா எச்சரித்தது. அதோடு இந்தியா மீது கை வைத்தால் சீனாவின் முக்கிய ராணுவ தளத்தை தவிடு பொடியாக்குவோம் என நேரடியாக எச்சரித்தது.

ரஷியாவின் நேசக்கரத்தின் உற்சாகத்தில் பாகிஸ்தானில் பல பகுதிகளை இந்தியா தரைமட்டமாக்கியது. பின்னர் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் அரண் அமைத்து நின்றன. இதனை கண்ட அமெரிக்க கடற்படை போர்களத்தில் இருந்து பின் வாங்கியது.

இவ்வாறு நமது நாட்டின் மோசமான கால கட்டத்தில் நமக்கு துணையாக நின்ற ஒரே நாடு ரஷியாதான் என்பதால் தற்போது வரை அந்த நாட்டிற்கு உச்ச நண்பனாக இந்தியா விளங்குகிறது. இதுவும் தற்போது ரஷியா- உக்ரைன் போரில் இந்தியாவின் நடுநிலைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

அதுமட்டுமல்ல இந்தியாவுக்கு ரஷியாதான் அதிக அளவு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. சுகோய் 30 விமானங்கள் 270 இந்தியா வசம் உள்ளன. இது ரஷியா ஏற்றுமதியாகும். இதை போல 1,300-க்கும் அதிகமான ரஷியாவை சேர்ந்த டி-90 பீரங்கிகள் இந்தியாவிடம் உள்ளது.

8 ரஷியா தயாரிப்பை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிடம் உள்ளன. இதற்கான பராமரிப்பை ரஷியா அவ்வப்போது செய்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் எஸ்-400 மிசைல் ஏவுகணை தடுப்பு கருவியை இந்தியா வாங்க உள்ளது. இதற்காக 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைன் நாடு இந்தியாவுக்கு சர்வதேச அளவில் உதவியது இல்லை. பொக்ரான் சோதனைக்கு பின் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உக்ரைன் பீரங்கியை வழங்கியது. அதேபோல் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தில் உக்ரைன் நிலைபாடு எடுத்திருந்தது. இதுபோன்று பல்வேறு காரணங்கள் தான் இந்தியாவின் நடுநிலைமைக்கு முக்கியமானவையாக திகழ்கின்றன. அதே நேரம் ரஷியாவுக்கு இந்தியா நட்பு நாடாக திகழ்வதால் ரஷியாவிடம் பேசுமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ரஷியா அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் மோடி பேசினார். அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்.

அதோடு உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் உள்பட அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர ஒத்துழைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று உக்ரைனில் முக்கிய நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்து இந்தியர்கள் தாயகம் திரும்ப ஒத்துழைப்பு நல்கியது.

இதற்கிடையே உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக 4 மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதன் பயனாக உக்ரைனில் தவித்த இந்தியர்கள் பல்வேறு வழிகளில் மீட்கப்பட்டு அதையொட்டி உள்ள அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இந்தியர்கள் விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.