Tamilசெய்திகள்

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா கைவிட வேண்டும் – இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தல்

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால்  ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் போர் மூலம் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுத்தி உள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது:

வரும் நாட்களில் ஜான்சன் இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாரம் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். அப்போது ரஷ்யா பின்வாங்கி இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவார். ஐரோப்பாவில் இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம், அந்நாட்டு பாராளுமன்றத்தில்  அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.